சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
524   திருவேங்கடம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 184 - வாரியார் # 244 )  

கறுத்ததலை வெளிறு

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனத்ததன தனதன தனந்த
     தனத்ததன தனதன தனந்த
          தனத்ததன தனதன தனந்த ...... தனதான

கறுத்ததலை வெளிறு மிகுந்து
     மதர்த்த இணை விழிகள் குழிந்து
          கதுப்பிலுறு தசைகள் வறண்டு ...... செவிதோலாய்க்
கழுத்தடியு மடைய வளைந்து
     கனத்தநெடு முதுகு குனிந்து
          கதுப்புறுப லடைய விழுந்து ...... தடுநீர்சோர்
உறக்கம்வரு மளவி லெலும்பு
     குலுக்கிவிடு மிருமல் தொடங்கி
          உரத்தகன குரலு நெரிந்து ...... தடிகாலாய்
உரத்தநடை தளரு முடம்பு
     பழுத்திடுமுன் மிகவும் விரும்பி
          உனக்கடிமை படுமவர் தொண்டு ...... புரிவேனோ
சிறுத்தசெலு வதனு ளிருந்து
     பெருத்ததிரை யுததி கரந்து
          செறித்தமறை கொணர நிவந்த ...... ஜெயமாலே
செறித்தவளை கடலில் வரம்பு
     புதுக்கியிளை யவனோ டறிந்து
          செயிர்த்தஅநு மனையு முகந்து ...... படையோடி
மறப்புரிசை வளையு மிலங்கை
     யரக்கனொரு பதுமுடி சிந்த
          வளைத்தசிலை விஜய முகுந்தன் ...... மருகோனே
மலர்க்கமல வடிவுள செங்கை
     அயிற்குமர குகைவழி வந்த
          மலைச்சிகர வடமலை நின்ற ...... பெருமாளே.
Easy Version:
கறுத்ததலை வெளிறு மிகுந்து
மதர்த்த இணை விழிகள் குழிந்து
கதுப்பிலுறு தசைகள் வறண்டு
செவிதோலாய்
கழுத்தடியும் அடைய வளைந்து
கனத்தநெடு முதுகு குனிந்து
கதுப்புறு பல் அடைய விழுந்(து)
உதடுநீர்சோர்
உறக்கம்வரும் அளவில்
எலும்பு குலுக்கிவிடும் இருமல் தொடங்கி
உரத்தகன குரலு நெரிந்து
தடிகாலாய்
உரத்தநடை தளரும்
உடம்பு பழுத்திடுமுன்
மிகவும் விரும்பி
உனக்கடிமை படும் அவர் தொண்டு புரிவேனோ
சிறுத்த செலு அதனுள் இருந்து
பெருத்ததிரை யுததி கரந்து செறித்த
மறை கொணர நிவந்த ஜெயமால்
ஏ செறித்து அ(வ்)வளை கடலில் வரம்பு புதுக்கி
இளையவனோடு
அறிந்து செயிர்த்த அநு மனையும் உகந்து
படையோடி
மறப்புரிசை வளையும் இலங்கை
அரக்கனொரு பதுமுடி சிந்த
வளைத்தசிலை விஜய முகுந்தன் மருகோனே
மலர்க்கமல வடிவுள செங்கை
அயிற்குமர
குகைவழி வந்த
மலைச்சிகர வடமலை நின்ற பெருமாளே.
Add (additional) Audio/Video Link

கறுத்ததலை வெளிறு மிகுந்து ... கருப்பாயிருந்த தலை முடி
நரையினால் மிக்க வெண்மையாகி,
மதர்த்த இணை விழிகள் குழிந்து ... செழிப்புற்று இருந்த இரு
கண்களும் குழிவிழுந்து,
கதுப்பிலுறு தசைகள் வறண்டு ... கன்னங்களில் இருந்த சதைகள்
வற்றிப்போய்,
செவிதோலாய் ... காதுகள் வெறும் தோலாக மெலிந்து,
கழுத்தடியும் அடைய வளைந்து ... கழுத்தின் அடிப்பாகம் முற்றிலும்
வளைந்து,
கனத்தநெடு முதுகு குனிந்து ... பருத்திருந்த அகன்ற முதுகும்
கூன் விழுந்து குறுகி,
கதுப்புறு பல் அடைய விழுந்(து) ... தாடையில் இருந்த பற்கள்
மொத்தமாய் விழுந்து,
உதடுநீர்சோர் ... உதடுகளில் ஜொள்ளு ஒழுக,
உறக்கம்வரும் அளவில் ... தூக்கம் வரும் சமயத்தில்
எலும்பு குலுக்கிவிடும் இருமல் தொடங்கி ... எலும்புகளைக்
குலுக்கித் தள்ளும்படி இருமல் வந்து,
உரத்தகன குரலு நெரிந்து ... வலிமையும் உறுதியும் பெற்றிருந்த
குரல் நெரிபட்டு அடங்கி,
தடிகாலாய் ... கைத்தடியே கால் போல உதவ,
உரத்தநடை தளரும் ... வலிமை மிகுந்த நடை தளர்ந்து
உடம்பு பழுத்திடுமுன் ... இந்த உடம்பு முதுமை அடைவதற்கு
முன்பு,
மிகவும் விரும்பி ... மிகுந்த விருப்பத்துடன்
உனக்கடிமை படும் அவர் தொண்டு புரிவேனோ ... உனக்கு
அடிமை பூண்டுள்ள அடியார்களுக்கு யான் தொண்டு
புரிய மாட்டேனோ?
சிறுத்த செலு அதனுள் இருந்து ... சிறிய மீன் உருவத்தினுள்
அவதாரம் செய்து,
பெருத்ததிரை யுததி கரந்து செறித்த ... பெரிய அலை வீசும்
கடலுக்கு அடியில் ஒளித்து வைத்த
மறை கொணர நிவந்த ஜெயமால் ... வேதங்களை மீட்டு
வருவதற்காகத் தோன்றிய வெற்றித் திருமாலும்,
ஏ செறித்து அ(வ்)வளை கடலில் வரம்பு புதுக்கி ... கணையைச்
செலுத்தி, அந்த வளைந்த கடலில் அணையைப புதிதாகக் கட்டி,
இளையவனோடு ... தம்பி இலக்குவனோடும்,
அறிந்து செயிர்த்த அநு மனையும் உகந்து ... ராவணனுடைய
நிலையை அறிந்து சீறிய (இலங்கையில் தீ மூட்டித் திரும்பிய)
அநுமனுடனும் மகிழ்ந்து,
படையோடி ... வானரப் படையைச் செலுத்தி,
மறப்புரிசை வளையும் இலங்கை ... வீரம் பொருந்திய மதில்கள்
சூழ்ந்துள்ள இலங்கையில் வாழ்ந்த
அரக்கனொரு பதுமுடி சிந்த ... அரக்கன் ராவணனது பத்துத்
தலைகளும் அறுபட்டு விழுமாறு
வளைத்தசிலை விஜய முகுந்தன் மருகோனே ... வில்லை
வளைத்த வெற்றி முகுந்தன்ஆகிய திருமாலின் மருகோனே,
மலர்க்கமல வடிவுள செங்கை ... தாமரை மலர் போன்ற வடிவுடைய
சிவந்த திருக்கரத்தில்
அயிற்குமர ... வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே,
குகைவழி வந்த ... குகையின் வழியாக வந்து
மலைச்சிகர வடமலை நின்ற பெருமாளே. ... வெளிவந்த
மலையாகிய, சிகரத்தை உடைய திருவேங்கடமலை மீது
எழுந்தருளியுள்ள பெருமாளே.

Similar songs:

524 - கறுத்ததலை வெளிறு (திருவேங்கடம்)

தனத்ததன தனதன தனந்த
     தனத்ததன தனதன தனந்த
          தனத்ததன தனதன தனந்த ...... தனதான

Songs from this thalam திருவேங்கடம்

524 - கறுத்ததலை வெளிறு

525 - சரவண பவநிதி

526 - நெச்சுப் பிச்சி

527 - கோங்கிள நீரிளக

528 - சாந்தமில் மோகவெரி

529 - வரிசேர்ந்திடு

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song